ரசிகனின் மடல் - திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு உங்கள் ரசிகன் எழுதிக்கொள்வது.
முதலில் உங்களுக்கு என் மனம் நிறைந்த 70வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியமும் மன பலமும் குறையாமல் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனது ஆசைப்படுகிறேன்.
எனது 6வது வயதில், 'படையப்பா' படத்தைத் திரையரங்கில் ரசித்தேன். உங்களை ரசிக்கத்தொடங்கியதற்கு அது தான் தொடக்கம் என நினைக்கிறேன். பின்பு 'பாட்ஷா' படத்தைத்தொலைக்காட்சியில் (குறிப்பாக தீபாவளி அன்று) தவறாமல் பார்த்துவிடுவேன். பாபா படத்தின் ட்ரைலரை பார்ப்பதற்காகத் தினமும் தொலைக்காட்சி முன்பு காத்திருப்பேன். வீட்டில் இருக்கும் கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு பாபா வசனங்கள் பேசியதுமுண்டு.
நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது சந்திரமுகி வெளியானது. அப்பொழுது ‘சன்பிஸ்ட் பிஸ்கட்’ வாங்கினால் ‘சந்திரமுகி’ படம் கொண்ட அட்டைகள் இலவசமாகக் கிடைக்கும். அவற்றைச் சேகரிப்பதில் பேரானந்தம் கொள்வேன். 25 அட்டைகள் சேகரித்தேன். அவற்றை இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன். அவற்றில் ஒன்று மட்டும் கடைக்காரர் திரும்பியபோது திருடியது.
நான் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு சனிக்கிழமை மதியம் 12 மணி. அனைவரும் படிக்கும் நேரம். ஆனால் யாரும் பெரிதாகப் படிக்கவில்லை. நான் மட்டும் மும்முரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்த விடுதி பாதுகாவலர், என் அருகில் வந்து நான் எழுதிய தாளை வாங்கி படித்தார்.
1. சந்திரமுகி
2. பாட்ஷா
3. பாபா
4. அண்ணாமலை
.
.
.
.
.
118. வேலைக்காரன்
119. பணக்காரன்
120. ராஜா சின்ன ரோஜா
121. மாப்பிள்ளை
உங்களைப்போல் அந்த ஆசிரியரும் அதிர்ந்து போனார். அன்று படிக்கும் நேரத்தை வீணடித்து நீங்கள் நடித்த படங்களைப் பட்டியலிட்டதற்காக முட்டி போடும் தண்டனை வழங்கினார். அன்று இரவு முட்டிகள் கடுமையாக வலித்தன. மிகக் கவலையுடன் உறங்கச்சென்றேன். காரணம், அப்போது நீங்கள் நடித்திருந்த 157 படங்களில் என்னால் 134 படங்கள் தான் பட்டியலிட முடிந்தது. மீதி 23 படங்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
90களில் பிறந்தவரும் உங்கள் ரசிகருமாய் இருக்கும் எனக்கு, உங்கள் படங்களை அதிகமாகக் காண வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது ராஜ் தொலைக்காட்சி தான். காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகளில் தினமும் ராஜ் தொலைக்காட்சியில் உங்கள் படம் தான். நான் காணத் தவறிய உங்களின் சிறந்த படங்களை ராஜ் தொலைக்காட்சி தான் வரிசையாக ஒளிபரப்பியது. அப்போது நான் அறியாத 23 படங்களில் 5,6 படங்களை ராஜ் தொலைக்காட்சி கண்டுபிடித்துக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனது பள்ளி விடுதியில் மாணவர்கள் வாசிப்பதற்காகத் தினமும் "தினத்தந்தி" நாளிதழ் மேசையில் வைக்கப்படும். திடீரென்று ஒரு நாள் உங்களைப்பற்றிய கட்டுரை என் கண்ணில் பட்டது. "எங்கேயோ கேட்ட குரல்" படத்தைப் பற்றிய குறிப்புக்கள் இருந்தன. வாசிக்கத்தொடங்கினேன். உங்களைப்பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறேன் என்ற மகிழ்ச்சி என்னுள் இருந்தது. கடைசி வரியில் "தொடரும்" என்று குறிப்பிட்டிருந்தது. மனம் குதிக்கத்தொடங்கியது. கட்டுரையின் தலைப்பை வாசித்தேன். "வரலாற்றுச் சுவடுகள் - ரஜினிகாந்த்." தொடர்ச்சியாக வந்த அனைத்து கட்டுரைகளையும் தவறாமல் வாசித்தேன். அதற்கு முன் வெளிவந்த கட்டுரைகளையும் தேடி வாசித்தேன். கட்டுரை வெளியாகி 2 நாள் கழித்து, அந்த கட்டுரைப்பக்கத்தை நாளிதழிலிருந்து கிழித்து, விடுதி பாதுகாவலரிடமிருந்து ஒளித்து, என் அறையில் மறைத்து வைப்பது வழக்கமானது.
ஒவ்வொரு ரசிகனும் சந்திக்கும் பிரச்சனை அவனுக்குப் பிடித்த நடிகரை அவன் நண்பர்கள் கேலி செய்வது. நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது என் நண்பர்கள் "பாபா" படத்தைக் கேலி செய்வார்கள். அப்பொழுது வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. நான் பதிலுக்கு நண்பர்களுக்குப் பிடித்த நடிகர்களைக் கிண்டல் செய்வேன். இப்பொழுது நினைத்துப்பார்க்கச் சிரிப்பாக இருப்பினும் அப்பொழுது அது மிகவும் ஞாயமான கோபமாகவே தோன்றியது.
10ஆம் வகுப்பு விடுமுறையில், உங்களுடைய பாடல்களை ஒலிப்பேழையில் (கேஸெட்டில்) பதிவு செய்து, தினமும் கேட்பேன். பாடல் வரிகள் மனதில் அச்சடித்ததுபோல் பதிந்தன. வரிகளின் அர்த்தங்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றை என் தினசரி வாழ்வில் கடை பிடிக்கத்தொடங்கினேன்.
"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" "வெற்றி நிச்சயம்" "வெற்றிக்கொடி கட்டு" போன்ற பாடல்களைப் பல முறை ரசித்துள்ளேன்.
ஒவ்வொரு வருடமும் திருப்பதி செல்லும் போதும் அங்குள்ள கடைகளில் விற்கும் "ருத்ராட்சங்கள்" என் கவனத்தை ஈர்க்கும். காரணம் நீங்கள் ருத்ராட்சம் அணிந்திருப்பீர்கள் என்பது மட்டுமே. ஒவ்வொரு வருடமும் வாங்கலாம் என்று நினைத்து வாங்காமல் செல்வதே வழக்கமாயிருந்தது. 12 ஆம் வகுப்பு படிக்கும்போது திருப்பதி சென்றோம். அம்முறை நிச்சயம் வாங்கவேண்டும் என்று தீர்மானித்து ஒரு ருத்ராட்சம் மற்றும் பித்தளை காப்பு வாங்கினேன். இரண்டையும் முதல் முறையாக அணிந்து நடந்த போது ஒரு எல்லையற்ற ஆனந்தம்.
பள்ளி நாட்களில் உங்கள் படங்களை முதல் நாள் ரசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லூரி முதல் ஆண்டு, நான் மதுரையில் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அக்டோபர் 1 "எந்திரன்" வெளியாகிறது. அப்போது மதுரையில் பெரிதாகத் திரையரங்கிற்குச் சென்றதில்லை. ரசிகர் மன்றத்திலும் நான் இல்லை. மன்றங்களில் இருப்பவர்களிடம் தொடர்பில்லை. திரையரங்கிற்குச் சென்று வரிசையில் நின்று முதல் நாள் பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. செப்டம்பர் 30, இரவு 7 மணி வரையில் முதல் நாள் பார்க்கும் எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. எனது சொந்த ஊரிலிருந்து ஒரு நண்பன் தொலைப்பேசியில் அழைத்து முதல் நாள் முதல் காட்சிக்கு ஒரு சீட்டு இருப்பதாகக் கூறி என்னையழைத்தான். உடனே கிளம்ப வேண்டும். 330 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். கல்லூரி பாடங்கள் தவறிப் போகும் (வருத்தமில்லை). 5 நிமிடம் யோசித்தேன். கிளம்பி ஊருக்கு வந்துவிட்டேன். காலை 10 மணி. திரையரங்கு திருவிழா நடைபெறும் நகரம் போல் காட்சியளித்தது. எங்கள் ஊரின் மிகத் தீவிர ரசிகர் உங்களைப் போல் வேடமிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். ரசிகர்கள் வந்துகொண்டே இருந்தனர். இசைக் கச்சேரி, சரவெடி மற்றும் பாலபிஷேகம் என ரசிகர்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். காட்சி நேரம் நெருங்க நெருங்க ஆர்வம் அதிகமானது. அரங்கிற்கு உள்ளே சென்றேன். உங்கள் பெயருக்கு இருந்த கூச்சல் என் காதை பிளந்தன. நானும் என்னையறியாமல் கூச்சலிட்டேன். பிறகு உங்கள் முகம் முதல் முறையாக வந்தபோது, திரையரங்கே அதிர்ந்தது. நான் குதித்துக்கொண்டிருந்தேன். என்னைக் கட்டுப்படுத்த என் நண்பனால் முடியவில்லை. அன்று படம் பார்த்து முடிவு செய்தேன் இனி உங்கள் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று.
நாட்கள் நகர்ந்தன. என்னுள் சில மாற்றங்கள். ருத்ராட்சம் மற்றும் பித்தளை காப்பைக் கழட்டினேன். உங்களின் ஓரிரு
இப்படி என் சிறு வயதிலிருந்து இன்று வரை என்னை ஈர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பெயருக்கு ஏற்றாற்போல். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். மீண்டும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா...!
இப்படிக்கு உங்கள் ரசிகன் இராதாகிருஷ்ணன்.
Awsome dear
ReplyDeleteமிகவும் அருமை 👏🤘
ReplyDeleteAwesome vera level letter thambi👌👌
ReplyDeleteNice ji. Nalla iruku
ReplyDeleteசிறப்பு👌🏼👏🏻👍🏼
ReplyDeleteActing is different and politics is different
ReplyDelete